பார்த்திபன் கனவு | அமரர் கல்கி

பார்த்திபன் கனவு கல்கி

பார்த்திபன் கனவு

            தமிழர்களின் வீரம் செறிந்த சரித்திரத்தை எளிய மொழியில், சாதாரண மனிதர்களும் படித்து இன்புறும் வண்ணம் படைப்புகளைத் தீட்டியவர் அமரர் கல்கி. ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பொன்னியின் செல்வன்’ என்று ஒவ்வொரு புதினமும் மொழி அழகாலும், காட்சி வர்ணனைகளாலும், பாத்திரப் படைப்புகளாலும் வாசகர்களைக் கட்டிப் போட்டுள்ளன. தமிழகத்தில் பிறந்த பெரும் பாலான குழந்தைகளுக்குக் கல்கி வைத்த பாத்திரங் களின் பெயர்கள்தான் வைக்கப்பட்டன என்றால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. வாசகர்கள் தம் தெஞ்சில் கல்கியைச் சுமக்கிறார்கள் என்றே அதற்கு அர்த்தம்.


            கல்கியின் முக்கியமான படைப்புகளில் ஒன்று ‘பார்த்திபன் கனவு. அவருடைய சரித்திரப் படைப்பு களில் முதல் படைப்பும் இதுதான். சோழ நாடு பல்லவர்களிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை விறுவிறுப்பான புதினமாகப் படைத்துள்ளார் “பார்த்திபன்கனவு. கல்கி.

            ‘பார்த்திபன் கனவு’ தொடருக்கு திரு.கோபுலு வரைத் தளித்த ஓவியங்கள் உயிரோட்டமுள்ளவை; எழில் நிரம்பியவை; நினைத்து நினைத்து மகிழ்ச்சி கொள்ள வைப்பவை. 1994ஆம் ஆண்டு கல்கி இதழில் மறு பிரசுரமாக ‘பார்த்திபன் கனவு’ இடம் பெற்றபோது அவர் தீட்டியவை. கோபுலுவின் ஓவியங்களோடு ‘பார்த்திபன் கனவு’ நாவலை வாசிப்பது கண்ணுக்கும் கருத்துக்கும் நல்லதொரு விருந்து.


            கல்கி பதிப்பகம் தொடங்கியதில் இருந்து, கல்கி அவர்களின் எழுத்துக் களைப் பிரசுரிக்கும்படி வாசகர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன. அதனை நிறைவேற்றும் வகையில், ‘பார்த்திபன் கனவு’ நாவலை எமது முதல் முயற்சியாக உங்கள் மூன் வழங்குகிறோம். இதைத் தமிழ்ச் சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்கும் என்பதிலும், அமரர் கல்கியின் இதர படைப்புகளையும் தொடர்ந்து பிரசுரிக்கும் எமது முயற்சிக்கு ஆதரவு இருக்கும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.

ஆர்.வெங்கடேஷ்,

பொறுப்பாசிரியர்

முன்னுரை

            திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை மாபெரும் தமிழறிஞர். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த தமிழ் ஆராய்ச்சியாளர். பதிப்பாசிரியரும்கூட. மொழிபெயர்ப்பு மற்றும் மேடைப் பேச்சு ஆகியவற்றில் தனி முத்திரை பதித்தவர். சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகவும் செயல்பட்டிருக் கிறார். கல்கியின் எழுத்துக்களின்பால் மாறாக் காதல் கொண்டிருந்தவர்.  பார்த்திபன் கனவு நூல் முதன் முதலில் 1943ஆம் ஆண்டு வெளியான போது அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையை இப்போதும் அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.


            ‘பார்த்திபன் கனவு’ என்பது சரித்திரம் பற்றிய அற்புத நவீனகமாகும். சுமார் 1300 ஆண்டுகளக்கு முன்னர் காஞ்சியில் பல்லவ சக்கரவர்த்தியாய் விளங்கியவர் நரசிம்மவர்மர். இவரே மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரத்தில் அதிவிசித்திரமான சிற்பங்களை இயற்றுவித்தவர். இவரும் இவர் போன்று இந்நூலில் வந்துள்ள ஏனைய பாத்திரங்களிற் பலரும் சரித்திரமறியப் புகழ் பெற்றோராவர். இந்தப் பாத்திரங்களைக் கொண்டும். வேறு கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டும், இந் நவீனகம் புனையப்பட்டுள்ளது. பல்லவர் ஆதிக்கம் பெற்றிருந்த காலத் தையே கதை நிகழ் காலமாக இந்நவீனகம் கொண்டது. அக்காலத்திலிருந்த சமய நிலைமையையும் அரசியல் நிலையையும் எழுது துகிலாகக் கொண்டு,வீரமும் காதலும் தேசப்பற்றும் விளங்க, அழகாக வரையப் பட்ட ஒரு சித்திரமாய் அமைந்துள்ளது இந்தவீனகம்.


            சோழ நாடு சுதந்திரம் இழந்து, அடிமை – வாழ்வு வாழ்கிறது. அதன் சுதந்திர வாழ்வையும், பரதகண்ட முழுவதிலும் பரந்து நிற்க வேண்டிய அதன் புகழையும் குறித்துப் பார்த்திபன் கனவு கண்டு அக்கனவைச் சீத்திரமாயெழுதி ஏங்கி ஏங்கி நைகின்றான். தனது ராணியாகிய அருள் மொழியையும் தன் புதல்வனாகிய விக்கிரமனையும் தன் கனவுலகைக் காணச் செய்கிறான், சுதந்திரத்தை மீட்கும் பொருட்டு நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியோடு வீரப்போர் விளைத்து மடிகிறாள். மடிவதற்கு முன் போர்க் களத்தில் தன்னைக் கண்ட பல்லவ சக்கரவர்த்திக்கு தன் கனவைத் தெரிவிக்கிறான். சக்கரவர்த்தியும் தம்மால் இயன்ற உதவியைச் செய்வதாக வாக்குறுதி செய்கிறார். இவ்வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக, பாண்டி நாடு சோணாடு முதலிய சிறு பிரிவுகளை நீக்கித் தமிழ்நாடு முழுமையும் ஒரு குடையின்கீழ் வைத்துத் தமிழ்நாட்டின் புகழ் உலகெங்கும் பரவச் செய்ய வேண்டுமென்று தாம் கண்ட கனவினையும்: சக்கரவர்த்தி கைவிட நேர்ந்தது.

            இவ்வாறு நேர்ந்ததற்கும் முக்கிய காரணம் பார்த்திபன் போர்க்களத்தில் விளைத்த வீரச் செயல்களேயாம். நவீன சுத்தின் முதலிலிருந்து கடைசி வரை தேசப்பற்று என்னும் அடிநாதமே ஒலித்துக் கொண்டிருக்கிறது.


      பெருங் கனவு நீங்கி, சிறு கனவு ஒருவாறு நனவாக முற்றுதற்கு அனுகூலமாக இருந்தது. சோழ குமாரனாகிய விக்கீரமனுக்கும் பல்லவ குமாரியாகிய குந்தவிக்கும் நிகழ்ந்த இனிய காதற்களவு. இக்களவு தளது தூய தன்மையினால் நம்மை முற்றும் வசீகரித்து விடுகிறது. விக்கிரமன் இக்காதலோடு போராடி அதை அடக்க முயல்கிறான்; காதலே வெற்றி பெறுகிறது. தேசப்பற்றில் மனம் முழுதும் அழுந்த நிறுத்திக் காதலை மறக்க முயல்கிறான்.

            ஆனால் அத்தேசப்பற்றோடு இரண்டறக் கலந்து நின்று விக்கிரமன் மனத்தைக் கபளீகரித்து விடுகிறது, குந்தவியின் பெருங்காதல் என்று சொல்ல வேண்டும். இக்காதல் வெளிப்படும் வாசாரூபம் (28ம் அத்தியாயம்) நம்மைப் புளகாங்கீதமடையச் செய்கிறது; நமது உயிர்க்குப் புதியதொரு சக்தியை அளித்து அதனைக் களிநடம் புரியச் செய்கிறது.

            வீரக் கனவுகள் இரண்டையும் காதற் கனவையும் ஒரு சேரச் சுயநலத்திற்குப் பலியிட்டு அழித்துவிட முயன்றது மாரப்ப பூபதியாகிய உட்பகை. இவன் பார்த்திபனது மாற்றந்தாயின் புதல்வன், அதிகாரப் பெரும் பித்துக் கொண்ட கொடியவன்! அந்நிய நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் புகுந்து, சைவ வைஷ்ணவ சமயங்களுக்குப் பரம விரோதியாய். தமிழ் மக்களுக்கு எமனாய், காளிதேவிக்கு உயிர்ப் பலியூட்டி மறைவில் வாழ்ந்து வந்த கபாலிகர் குருவைத் துணைக் கொண்டு தனது கோர கிருத்தியங்களை நிறைவேற்ற முயன்றாள். ஆனால் படகோட்டியாகிய பொன்னனும் அவன் மனைவியாகிய வள்ளியும் தாய்த்திருநாட்டின் மீதும் தங்கள் அரசர்பிரான் மீதும் கொண்ட பக்திபூர்வமான அரிய சேவை, தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த பகையிருளைப் போக்கி அதனை ஒளியோடு பிரகாசிக்கச் செய்தது. பல்வேறு மறைவு வேடம் பூண்டு தோன்றாத் துணையாய் விளங்கி வந்த நரசிம்ம சக்கரவர்த்தியை நாம் மறக்க முடியாது. அவருடைய சேசைபதியாய்த் துணை நின்று போர்த் தொழிலில் சிறந்து விளங்கி, தாம் மேற்கொண்ட வீரப்பணி முற்றியதும் சமய கைங்கரியத்திற்காகத் துறவு பூண்ட சிறுத்தொண்டரையும் நாம் மறக்க முடியாது. துறவு பூணுவது சுயநலத்திற்காக அன்று, நன்மையின் பொருட்டு என்பதை இந்நவீனகத்திற்காணும் இவரது சரித்திரம் நன்கு புலப்படுத்துகிறது.


            சரித்திர தொடர்புடைய நவீனங்கள் ஒரு சில நமது மொழியில் இப்போதுதான் தோன்றத் தொடங்கியிருக்கின்றன. இந்த நவீனகத்தை இருவகைப் படுத்தலாம். ஒன்று சாதாரண இயற்கை நிகழ்ச்சியோடு பொருந்தியது. மற்றையது அசாதாரண இயற்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பது. இவற்றை இயற்கைச் சரித்திர நவீனகம் என்றும், ‘அற்புதச் சரித்திர நவீனகம்’ என்றும் முறையே பெயரிடலாம்.


            அற்புத நவீனகத்திற்கு உயிர் நாடியாயிருப்பன வீரமும் காதலுமே (வால்டெர் ராலே ‘ஆங்கில நவீனகம்’ பக்கம் 105). இவ்வகை நவீனகங்கள் தமிழில் இதுவரை தோன்றாததற்குக் காரணம் இவற்றிற் சூரிய நிகழ்ச்சிகள் நமது தேச சரித்திரத்தில் இல்லாமையன்று. தக்க ஆசிரியர்கள் இம்முறையில் தலையிடாமையே காரணமாகும்.


            இங்கு வெளியிடப்படும் நவீனகத்தை வாசிப்பவர்களுக்கு, பல்வகை யாலும் தகுதியுடைய ஓராசிரியர் இப்போது தோன்றியுள்ளமை எளிதில் புலனாகும். இந்த ஆசிரியரது தமிழ்நடை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. உயிர்த் தத்துவத்தோடு வழங்கிவருஞ் சொற்களே இவரால் கையாளப் படுகின்றன. தூய தமிழ்ச் சொற்களைத் துருவித் தேடுவதுமில்லை. வடமொழிச் சொற்களென்று தூர விலகியோடுவதுமில்லை. மிகத் தெளிவான நடை, உணர்ச்சி ததும்பும் நடை, வாசகர்களை உடன் கொண்டு செல்லும் நடை, சந்தர்ப்பத்திற்கும் பாத்திரங்களுக்கும் தக்க நடை; இக்காலத்துள்ள வசனகர்த்தர்களுள் முன்னணியில் நிற்பவர் இவ்வாசிரியர். இவர் அளித்துள்ள இலக்கிய விருந்தின் சுவையை நுகர்வோமாக.

எஸ்.வையாபுரிப் பிள்ளை

பார்த்திபன் கனவு

அமரர் கல்கி

மின்னூல் ஆக்கம் –தமிழ்நேசன்

© பரதன் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

முதல் பதிப்பு. நவம்பர். 2014

விலை 220

கல்கி பதிப்பகம் : 28

கல்கி பதிப்பகம்.

பரதன் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஓர் அங்கம்.

பதிப்பாளர்
லக்ஷ்மி நடராஜன்

ஆசிரியர்
ஆர்.வெங்கடேஷ்

பதிப்பாசிரியர் : லதானந்த்

அட்டை மற்றும் படங்கள் : கோபுலு

0 responses to “பார்த்திபன் கனவு | அமரர் கல்கி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »