நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்
“நற்காரியங்கள் எப்பொழுதும் நன்மை தரும்!” என்பதற்கேற்ப, “நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகளை எழுதி வெளியிடும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம்.
பெருமானார் அவர்கள் வரலாற்றை உலக முழுவதிலும் உள்ள அறிஞர்கள் எழுதிப் பெருமை பெற்றிருக்கின்றனர். மேலும், மேலும் எழுதுவார்கள். ஆயினும், இந்நூல் சரித்திரத் தொடர்புடைய சம்பவங்களைச் சுருக்கமாகத் தெளிவாக, சுவையாகக் கற்றோரும் மற்றோரும் படித்து மகிழத் தக்கவாறு எழுதியுள்ளோம்.
குறைகள், பிழைகள் காணப்படுமேயானால் அவை எங்களுடையவை ; புகழ் அனைத்தும் ஆண்டவனுக்கே!
பன்மொழிப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், பெருமதிப்பிற் குரிய இஸ்லாமியப் பேரறிஞர் மேதை மௌலானா மௌலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாகிபு MA. B.Th அவர்கள், தங்களுடைய அரிய பவ பணிகளுக்கிடையே இந்நூலைச் சரிபார்த்து உதவி, அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.
மயிலாடுதுறை ஏ.வி.ஸி. கல்லூரி சரித்திரப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், பன்மொழி அறிஞர் ஜனாப் அமீர்அலி M.A., M.Ed அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்நூலில் உற்சாகம் காட்டியதோடு, பாராட்டுரையும் அளித்திருக்கின்றார்கள்.
இத்தகைய நூலை எழுதத் தூண்டியவர்கள் பலர் அவர்களுள் அன்புசால் சொ.மு.க. ஹமீது ஜலால் அவர்களும் டாக்டர் ஹக்கீம் MM முஸ்தபா அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
மற்றம், பல வகையில் உதவி புரிந்த வர்த்தகப் பிரமுகர்கள்: குறிப்பாக, சீதக்காதி அறக்கட்டளை நிறுவனத்தினர். அச்சிட்டுக் கொடுத்தவர்கள்.
ஆகிய அனைவருக்கும் எங்களுடைய இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை-600 001 எம்கே. ஈ.மவ்லானா
முல்லை முத்தையா
பன்மொழிப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா, மௌலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாகிபு M.A., B.TH அவர்களின் அணிந்துரை
பிஸ்மில்லாஹிர்ரமானிர் ரம்.
நஹ்மதுவ நூலல்லி அலா ரஸூலிம் கரீம்.
(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்…” (59:7) என்று இறைவன் தன் திருமறையில் அறிவுறுத்துகிறான்.
நபிகள் நாயகம் அவர்கள் கொடுத்ததையும், விலக்கியதையுங் கொண்ட அறிவுக் கருவூலத்துக்கு “ஹதீது” என்று பொதுவாகக் குறிப்பிடப்படும். அவை உலக மாந்தரினம் முழுமைக்கும், எல்லா நிலைகளிலும் பயன்படக்கூடியவை. ஏனெனில் அவர்கள் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் மனுக் குலத்துக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.
“தந்தைதா யிழந்த தனயராய்க் குடும்பத் தலைவராய், வணிகராய்த் தரும தவராய்; தந்திடாச் சமய குரவராய்த் தரும நாதராய்; நரபதி, ராஜ்ய தந்திரி, அறப் போர்த் தளபதி, எனினும் தாசர்க்கும் தாசராய், இணையில் அந்திய நபியாய் அஹ்மதிவ்வுலகுக்கு அளித்துன ஞானமே ஞானம்!” என்று நபி பெருமானாரின் ஈடு இணையில்லாத இந்த முன் மாதிரித்துவத்தை ஓர் அரிய கவிதையில் சித்தரிக்கின்றார்கள் மறைந்த மாக்கவிஞர் ம.கா.மு. காதிறு முஹிய்யிதீன் மரைக்காயர் (ரஹ்) அவர்கள்.
நபிகள் பெருமானார் போதித்த அனைத்தும் அவர்களுடைய தீர்க்கதரிசன வாழ்க்கையிலும், உபதேசங்களிலும், செயல் முறைகளிலும், உன்னதமான முறையில் விளக்கிக் காட்டப் பட்டுள்ளன. அவர்களின் போதனைகள் அவர்களின் வாய்ப் பேச்சுகளில் மட்டும் அடங்கியிருந்தால் அதை நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குத் துணை செய்வனவாக அமைவதில் சிரமங்கள் ஏற்படும். எனவே நபி பெருமானாரின் “ஸுனன்” என்னும் செயல் முறைகளே, அவர்களுடைய போதனைகளைச் செயல்படுத்தும் ஒழுங்கை நமக்குக் கற்றுத் தருகின்றன.
இச்செயல் முறைகள் பல்வேறு கனங்களில் நிகழ்ந்திருக்கின்றன. இச்சுவையான நிகழ்ச்சிகளில் சிலவற்றைத் தொகுத்து, இனிமையான தமிழில் நமக்கு எடுத்துத் தருகிறார்கள் பகங்கதிர் எம்கே.ஈ. மவ்லானா அவர்களும்,
பழம் பெரும் எழுத்தாளரான முல்லை முத்தையா அவர்களும். பகங்கதிர் மவ்லானா அவர்களின் “சேது முதல் சிந்து வரை” என்ற ஆய்வு நூலுக்கு முதற் பரிசு கொடுத்திருக்கிறது தமிழ் வளர்ச்சிக் கழகம். எனவே அவர்களுடைய எழுத்தாற்றலைப் பற்றி தான் எடுத்தெழுத வேண்டியதில்லை.
முல்லை முத்தையா அவர்கள் நாற்பது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் தன்னிகரற்ற ஓர் இடத்தை வகித்து வருகிறார். சொற் சிக்கனமும், சுவையும், பயனும் மிக்க ஒரு நூல் நடையை தமதாக்கிக் கொண்ட அருமையான எழுத்தாளர் அவர் ஏற்கெனவே பல அரிய நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குத் தந்தவர்.
இந்த நூலை ஆழ்ந்த கவனத்துடன் படித்துப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அத்துடன் இதற்கு அணிந்துரை எழுதும் ஒரு நல்வாய்ப்பும் எனக்குக் கிட்டிற்று. அல்ஹம்துலில்லாஹ்
இத்தகைய சிறப்பான ஒரு நூலை, சீரிய முறையில் அமைத்து, வாசகர்களுக்கு வழங்கும் நூலாசிரியர்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். தம் வாசகர்கள் இதை உளமாற வரவேற்பார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன்.
சென்னை-600016 அப்துல் வஹ்ஹாப்
மயிலாடுதுறை, ஏ.வி.ஸி. கல்லூரியின் சரித்திரப் பேராசிரியர் உயர்திரு. H. அமீர் அலி M.A., M.Ed; அவர்களின் பாராட்டுரை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்குப் புதிய புரட்சியை தோற்றுவித்தவர்கள்; புதுமையான தத்துவக் கருத்துக்களையும் அறக் கோட்பாடுகளையும் புகட்டி தாமே பின்பற்றி ஒழுகிக் காட்டியவர்கள்; சொல்லும் செயலும் ஒன்றி ஒழுகி முன்மாதிரியாக நின்றவர்கள். அன்பிலும் பண்பிலும், போரிலும், அமைதியிலும், நட்பிலும், சீலத்திலும், அணிகலனாகத் திகழ்ந்தவர்கள்; உற்றார், உறவினர், அயலார், பிற சமயத்தார் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் நேசக்கரத்தை நீட்டி,
புதியதோர் அரசை உருவாக்கி அனைவருக்கும் மதிப்பையும் உயர்வையும் அளித்தவர்கள்; “தாயின் காலடியில், சுவர்க்கம் உள்ளது” என்று மொழிந்து தாயின் பெருமையையும் உலகிலேயே பெண்ணுக்குச் சொத்துரிமையையும் அணித்துப் பெண்ணுரிமையைப் போற்றியவர்கள்; “பணி செய்தவனின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவன் கூலியைக் கொடுத்து விடுங்கள். ” என்று இதமாகக் கூறி உழைப்பின் உயர்வை வலியுறுத்தியவர்கள்; “அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்கும் பொழுது நாம் விருந்து உண்பது தடுக்கப்பட வேண்டியது” என்று அறிவுரை கூறி, ஏழையின் பட்டினியையும் வறுமையையும் சுட்டிக் காட்டி அதனை நீக்கும் வழிமுறைகளையும் அளித்தவர்கள்:
எதிரிகளை வெற்றி கொண்ட போதிலும் அவர்களை மன்னித்த பெருந்தகை உலக வரலாற்றிலேயே அடிமைத் தனத்தை ஒழித்த முதலாவது சமுதாயச் சிற்பி- அடிமைகளுக்கு விடுதலை அளித்த ஏந்தல்; மறை தந்த இறைதூதர்; புதியதோர் சமுதாயத்தையும், புதியதோர் நாகரிகத்தையும், உலகின் ஒளிவிளக்காக விட்டுச் சென்ற சீர்திருத்தச் செம்மல், நபிநாயகம் அவர்களின் தாமம் ஊழி ஊழிகாலமாக நிலைத்து நிற்கின்றது. நிலைத்து நிற்கும்; நிலைத்து நிற்குமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாவதாக!
நபி நாயகத்தின் வரலாற்றை பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்நூலை இயற்றியுள்ள திரு முல்லை முத்தையா அவர்களும். ஜனாப் எம் கே. ஈ. மவ்லானா அவர்களும் வரலாற்றை வேறு புதிய கோணத்திலிருந்து ஆய்ந்துள்ளார்கள். காலக் கண்ணாடியின் அடிப்படையில் வரலாற்றைக் கூறாமல் மாநபி அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு, அவற்றால் மனிதன் பெற வேண்டிய நற்பண்புகள் யாவை படிப்பினைகள் எவை என்ற அகன்ற அடிப்படையில் ஆய்ந்து இந்நூலை இணைந்து இயற்றியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பொதுவாக தமிழ் நல்லுவகினர் அனைவரும் படித்து இன்புறுவதற்காகவே இந்நூலை புதிய முறையில் எழுதியுள்ளார்கள்,
திரு முல்லை முத்தையா அவர்கள் தமிழ் நூல்களின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் தம் வாழ்நாட்களை அர்ப்பணித்தவர்கள்; சிறந்த தமிழ் வல்லுநர்; வாழ்க்கைச்சுமைகளிடையே மதிப்பு பொறுப்பு தாங்கொணாத நஷ்டங்களைச் சுமத்திய நிலையில் நபிகள் நாயகத்தின் வரலாற்றை ஆய்ந்து மனம் உருகி, மனம் ஒன்றி, இந்நூலை இயற்றியுள்ளார்கள்,
தமிழ்த் தென்றல் போல, சுவையான செய்திகளைப் பசுமையாகவே தரத்தக்க ஆற்றல் படைத்த “பசுங்கதிர்” ஆசிரியர், கலாநிதி ஞானக் கவிச்சித்தர் எம்கே.ஈ. மவ்லானா அவர்களை இஸ்லாமிய உலகும். பத்திரிகை உலகும் நன்கு அறியும். நல்ல தமிழ் எழுத்தாற்றல் படைத்தவர்கள்; பல நூல்களை எழுதியவர்கள்; அவர்களும் இணைந்து இந்நூலை எழுதியுள்ளார்கள்.
இந்நூல் பற்பல பதிப்பாக மலர்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் இறைஞ்சி “துஆ” செய்தவனாக, இந்நூலுக்கு என் பாராட்டுரையை அளிக்கின்றேன். ஆமின்
ஹஅமிர் அலி
நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்
முல்லை முத்தையா
வெளியீடு – Free Tamil Books.com
Leave a Reply