திருப்புகழ் திரட்டு
எல்லாரு ஞானத் தெளிஞரே கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ-பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி,
இற்றைக்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். இவர் முருகப்பெருமானிடம் இறவாத இன்ப அன்பு பூண்டவர். கனவிலும் நனவிலும் முருகன் புகழை மறவாதவர். இவர் தந்த முருகன் புகழே திருப்புகழ்.
சந்தச் சுவையும், பக்திச் சுவையும் பொதிந்து விளங்கும் அருணகிரிநாதர் திருப்புகழ் படிப்போரையும் கேட்போரையும் பரவசப்படுத்தி முருகப் பெருமானி டத்து மீளா அன்பு பூணச்செய்கின்றது. முருகன் திருப்புகழ் ஓதி முருகன் திருவருளை வேண்டும் அடியார்களுக்கு உதவுமுகமாகத் திருப்புகழ் திரட்டு என்னும் இந்நூலை வெளியிட்டுள்ளோம்.
இந்நூலில் ஆறுபடை வீடுகளின் தல வரலாற்றுச் சுருக்கமும், இப்படை வீடுகளுக்கான திருப்புகழ்ப் பாடல் களில் சிறப்பான திருப்புகழ்ப் பாடல்களும் ஏனைய சில பொதுத் தலங்களுக்கான திருப்புகழ்ப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
முருகனடியார்கள் நாளும் பொழுதும் இத்திருப் புகழ்களை அன்புடன் ஓதி அருள் பெருக்குவார்களாக;
மறவன்புலோ, மு.கணபதிப்பிள்ளை.
சாவகச்சேரி.
15-6-78.
ஆறுமுகன் துதி
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரைவ தைத்தமுக மொன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம மர்ந்த பெருமாளே.
சுப்பிரமணியர் துதி
பட்சத்தொடு இரட்சித்தருள்
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதான.

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர – எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் – அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் – இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் – ஒருநாளே
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொக்கந டிக்கக் கழுகொடு – கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் ரிகடக – எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுரு
குத்திப்புதை புக்குப் பிடியென – முது கூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல – பெருமாளே,
பொருளடக்கம்
1.விநாயகர் துதி
2. சுப்பிரமணியர் துதி
3. முதற்படை வீடு திருப்பரங்குன்றம்
4. இரண்டாம் படைவீடு திருச்செந்தூர்
5. மூன்றாம் படைவீடு பழநி (திருவாவினன்குடி)
6. நான்காம் படைவீடு திருவேரகம் (சுவாமிமலை)
7. ஐந்தாம் படைவீடு குன்றுதோறாடல்
8. ஆறாம் படைவீடு பழமுதிர்சோலை (அழகர்கோயில்)
9. ஆறுதிருப்பதி
10. பொது
அருணகிரிநாத சுவாமிகள் அருளிய
திருப்புகழ் திரட்டு
பதிப்பாளர்
காந்தளகம்
213, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்,
ரூபா 5.00
முதற்பதிப்பு – 15.06.1975
Leave a Reply