தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்


            எழுத்தாளர்களின் நன்மைக்காக எழுத்தாளர்களின் கூட்டுறவு முயற்சியால் நடைபெற்று வருவது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், தமிழுறவு என்ற முத்திரையுடன் இன்று வரை 89 நூல்களை வெளியிட்டிருக்கிறது. 23ஆவது வெளியீடான இது இப்போது இரண்டாம் பதிப்பாக வருகிறது. தரமான நூல்களை நல்ல முறையில் வெளியிட்டுப் புதிய தமிழிலக்கியப் பரப்புக்கு அணி செய்ய வேண்டும் என்றும், விற்பனையில் வரும் ஊதியத்தில் பெரும் பங்கினை எழுத்தாளர் பெற வேண்டும் என்றும் எண்ணியே இந்தச் சங்கம் பணி புரிகிறது.

            புத்தகம் வெளியிடத் தொடங்கியது முதல் இதற்குப் பல துறைகளிலிருந்தும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. முக்கியமாக அரசியலாரும், கூட்டுறவுப் பகுதியினரும், நூல் நிலைய அதிகாரிகளும் அளிக்கும் ஆதரவை நன்றியறிவுடன் பாராட்டுகிறோம். இன்னும் போதிய அளவுக்கு ஆதரவு கிடைக்குமாயின் பன்மடங்கு சிறப்பான வகையில் இந்தத் தொண்டை ஆற்ற முடியும் என்ற ஊக்கமும் நம்பிக்கையும் இப்போது உண்டாகியுள்ளன.

ஒரு பதிப்புக்கு இரண்டாயிரம் படிகள் வெளியிட்டு அவற்றை ஓராண்டுக்குள் விற்றுவிட வேண்டும் என்பது எங்கள் அவா. இது நிறைவேற முடியாத பேராசை அன்று. நூல் நிலையங்களும் கல்வி நிறுவனங்களும் இந்த வெளியீடுகளை வாங்கி ஆதரித்தால் இந்த அவா நிறைவேறும், கூட்டுறவுத் துறையினரும் அரசாங்கமும் எங்களுக்கு இன்னும் மிகுதியான ஆதரவைத் தருவார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

எங்கள் முயற்சியை ஆதரிக்கும் யாவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழுறவாளர்

சென்னை-5
25-3-77.

 

முன்னுரை

சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் ஆண்டு தோறும் நடைபெறும் “கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவுச் சொற்பொழிவு” வரிசையில் 196364ஆம் ஆண்டுக்குரிய சொற்பொழிவை நிகழ்த்தும்படி பல்கலைக் கழகத்தினர் என்னைப் பணித்தார்கள், வளர்ந்துவரும் புதிய இலக்கியப் உடைப்புக்களைப் பற்றிய சொற்பொழிவாக இருக்கவேண்டும் என்பது இந்த அமைப்பின் நோக்கம், ஆகவே நான் “தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்பது பற்றிப் பேசுவதாக ஒப்புக்கொண்டேன். 1964ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13, 14, 15ஆம் தேதிகளில் இந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

மூன்று நாளும் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் தலைமை தாங்கினார். இறுதி நாளில் இந்தச் சொற்பொழிவுகளைப் பாராட்டிப் பேசினர். இந்தச் சொற்பொழிவுகளை ஆற்ற வாய்ப்பு அளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொற்பொழிவுகளுக்குத் தலைமை தாங்கிப் பாராட்டிய டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கும் என் நன்றியறிவு உரியது.

       

இந்தச் சொற்பொழிவை நடத்துவதற்கு மூலதனம் வழங்கியவர்கள் ‘கல்கி’ காரியாலயத்தார். கல்கியின் நினைவைப் பசுமையாக வைத்திருக்க இந்தச் சொற்பொழிவு வரிசை உதவும் என்று இதனை அமைத்த அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி பாராட்ட வேண்டும்.

 வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்கு ஆசிரியராக இருந்தபோதும் அவர் தமிழுக்காக ஆற்றிய பணி வரலாற்றில் இடம் பெறற்குரியது. தமிழில் எதனையும் தெளிவாகவும் சுவையாகவும் எழுதலாம் என்று காட்டினார் கல்கி. சிறுகதைகளையும் நகைச்சுவைச் சித்திரங்களையும், கலை விமரிசனங்களையும், அரசியல் கட்டுரைகளையும், வேறு பலவகைக் கட்டுரைகளையும், நாவல்களையும், எழுதி எழுதிக் குவித்தார் அவர்.

கல்கிப் பத்திரிகையின் ஆரம்ப காலங்களில் ஒவ்வோர் இதழிலும் பல வேறு தலைப்பில் பல வேறு கட்டுரைகள் எழுதி முக்கால் பத்திரிகையை நிரப்ப வேண்டிய அவசியம் அவருக்கு நேர்ந்தது. சிறிதும் சளைக்காமல் அதைச் செய்தார். எதை எழுதினாலும் பளிச்சென்று தெளிவாக விளங்கும் நடையில் எழுதினார்; ஆவலைத் தூண்டும் வகையில் எழுதினார்; சுவைத்துப் படிக்கும்படி எழுதினார். அந்தக் காலத்தில் தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலம் அறிந்தவர்கள் படிப்பதில்லை. மற்றவர்களிலும் சிலரே படிப்பார்கள். கல்கி பேனாப் பிடித்து எழுதத் தொடங்கிய பிறகு அடுப்பங்கரை முதல் அலுவலகங்கள் வரையில் அவருடைய எழுத்துப் புகுந்தது.

ஆங்கிலப் பட்டதாரிகளும் பெரிய வேலையில் இருந்த அதிகாரிகளுங்கூட அவர் எழுதியவற்றைப் படித்து அவற்றைப்பற்றி உரையாடத் தொடங்கினார்கள், அவருடைய தொடர் கதைகளைப் பற்றிய விமரிசனப் பேச்சுக்கள் வீடுதோறும் எழுந்தன.

இந்த அற்புதத்தைக் கல்கி செய்ததனால் தமிழ் நாட்டு மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வம் மிகுதியாயிற்று. இன்று பத்திரிகைகள் லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று தமிழ்நாட்டில் செலவாகின்றன என்றால் அதற்கு அடிக்கல் நாட்டியவர்கல்கி என்பதைச் சிறிதும் தடையின்றிச் சொல்லலாம்.

எதையும் தாம் நன்றாகப் புரிந்துகொண்டு, யாருக்குச் சொல்கிறோமோ அவர்கள் மனநிலையையும் புரிந்துகொண்டு, அவர்கள் உளங்கொள்ளும் வகையில் எழுதும் உத்தி கைவரப் பெற்றவர் கல்கி. சங்கீத விமரிசனத்தைத் தமிழில் அவர் தாம் தொடங்கி வைத்தார். ‘கர்நாடகம்’ என்ற பெயரில் அவர் எழுதிய விமரிசனங்களைப் பொதுமக்கள் படித்துச் சுவைத்தது பெரிதன்று; சங்கீத வித்துவான்களே போற்றிப் பாராட்டினர்கள்.

கல்கியினால் புகழ் பெற வேண்டும், அவருடைய விமரிசனத்தில் தமக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று சில சங்கீத வித்துவான்கள் தவம் கிடந்தார்கள். பெரிய புள்ளிகளைப் பற்றிய சித்திரங்கள் அவருடைய எழுத்தில் வண்ணமும் வடிவமும் பெற்று மலர்ந்தன. தொடர்கதையை எவ்வளவு நீளமாக எழுதினாலும் வாரந்தோறும் அதை எதிர்பார்த்துப் படித்து இன்புற்றார்கள் வாசகர்கள், சரித்திர நாவல்களைப் படைப் பதிலும் அவரே முதல் புகழைக் கட்டிக் கொண்டார். ‘பொன்னியின் செல்வ’னைப் போன்ற பிரம்மாண்டமான நாவல்களை எழுத அவருடைய சிந்தனையும் கற்பனையும்: ஆழமாகவும் அகலமாகவும் உயரமாகவும் அமைந்திருந்தன.

            தேசீயப் போராட்ட காலத்தில் அவருடைய எழுத்துக்கள் மக்களுக்கு உணர்ச்சியையூட்ட எத்துணை பயன் பட்டன என்பதை அக்காலத்தவர்கள் நன்கு அறிவார்கள். நூறு சொற்பொழிவுகளால் ஆகாத காரியத்தை அவருடைய தலையங்கம் ஒன்று செய்துவிடும்.

            பொதுவாக, வளர்ந்து வரும் உரை நடை இலக்கியத்தில் அவர் ஒரு புது யுகத்தைத் தோற்றுவித்தார் என்று சொல்லி விடலாம். பத்திரிகைகளை நடத்துவதிலும், தமிழுரை நடையைத் தெளிவும் சுவையும் உடையதாக்குவதிலும், தமிழில் பல புதிய துறைகளைப் புகுத்துவதிலும், தம்மைப் பின்பற்றிப் பல எழுத்தாளர்கள் உருவாகும்படி செய்வதிலும் அவர் இணையற்றவராக விளங்கினர்.

            இத்தகைய ஒருவருடைய பெயரால் இந்தச் சொற்பொழிவு வரிசையை அமைத்த ‘கல்கி’ காரியாலயத்தார் நல்ல பொருத்தமான காரியத்தையே செய்திருக்கிறார்கள். பல்கலைக்கழக அரங்கில் புதிய தமிழுக்கும் வரவேற்பு உண்டு என்ற நம்பிக்கையை இதனால் தமிழ் எழுத்தாளர்கள் பெறுவார்கள்,
‘கல்கி’ யோடு பழகிய நண்பர்களில் நானும் ஒருவன், அவர் ஆனந்த விகடனில் முறையாக ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய பழங்காலத் தொட்டே அவருடன் உறவாடும் பேறு எனக்குக் கிடைத்தது.

            என்னுடைய ஆசிரியப்பிரானாகிய டாக்டர் மகாமகோபாத்தியாய ஐயரவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் நல்வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இப்போது அவருடைய நினைவுச் சொற்பொழிவை ஆற்றும் செவ்வி கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

            இந்தச் சொற்பொழிவுகளில் முதல் நாள் பேச்சில் பொதுவாகத் தமிழ் நாவல்களின் தோற்றத்தையும் பிறகு அவை வளர்ந்து வந்த வகையையும் ஆராய்ந்திருக்கிறேன். இரண்டாம் நாள் பேச்சில் பழைய நாவல்கள் மூன்றைப் பற்றிய ஆராய்ச்சியைக் காணலாம். மூன்றாம் நாள் சொற்பொழிவில் கல்கியின் நாவல்களைப் பற்றிப் பேச வேண்டும் என்பது என் விருப்பம்; அவர் எழுதிய நாவல்கள் எல்லாவற் றையும் பற்றிச் சொற்பொழிவு ஆற்றுவதானால் அது மிகமிக விரிந்து செல்லும். ஆகவே சரித்திர நாவலுக்காகச் ‘சிவகாமியின் சபதத்தையும், சமூக நாவலுக்காக ‘அலையோசை’யையும் ஆராய்ந்து என் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறேன்.

            ‘சிவகாமியின் சபதம்’ நாடக மேடை ஏறிப் பெரும் புகழ் பெற்றதென்பதையும் ‘அலையோசை’ சாகித்திய அகாதமியாரின் ஐயாயிர ரூபாய்ப் பரிசு பெற்ற தென்பதையும் தமிழ் மக்கள் அறிவார்கள். ‘அலையோசை’ தாம் எழுதிய நாவல்களில் நிலைத்து நிற்பதற்குரியது என்று அதன் ஆசிரியரே நம்பிக்கை பூண்டிருந்தார்; இதனை அவரே எழுதியிருக்கிறார்,

            தமிழ் நாவல்களைப் பற்றிய ஆராய்ச்சியில் புகுந்தபோது ஆங்கில நாவல்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிய செய்திகளை அறிய வேண்டும் என்று எண்ணிப் பல நூல்களைப் படித்தேன். அதனால் பெரிதும் பயன் பெற்றேன். இந்தச் சொற்பொழிவுகளை ஆற்றும் வாய்ப்பு நேராமல் இருந்திருந்தால் அந்தப் பயன் எனக்குக் கிடைத்திராது.

            இந்தச் சொற்பொழிவுகளில் தமிழ் நாவல்களின் ஆராய்ச்சியை முழுமையாக வெளியிட்டிருக்கிறேன் என்று சொல்ல இயலாது. குறிப்பிட்ட கால வரம்புக்குள் பேச வேண்டிய வரையறை இருந்ததனால் அதற்குள் அடங்கும்படி கருத்துக்களை வகை செய்து கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே எல்லா நாவல்களையும் படித்து அறிந்து எடை போட்டுப் பேச முடியவில்லை.

            இன்றும் தமிழகத்தில் புகழ் பெற்ற நாவலாசிரியர்கள் பவர் இருக்கிறார்கள். பல அரிய நாவல்களை அவர்கள் படைத் திருக்கிறார்கள். அந்த நாவல்களைப் பற்றி நான் ஆராயவில்லை. வாழும் ஆசிரியர்களின் படைப்புக்களைப் பற்றி ஆராய்வதில் பல சங்கடங்கள் உண்டு பொது வகையில் சொல்லி விட்டால் போதுமென்றும், இந்தச் சொற்பொழிவுகளில் மேலே விரிவாக ஆராய இடம் இல்லை என்றும் எண்ணியே அவற்றைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

            மூன்று சொற்பொழிவுகள் அடங்கிய இப்புத்தகம் தமிழுறவு வெளியீடாக வருகிறது. இதனை வெளியிட்டுக் கொள்ளும்படி இசைவு தந்ததற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காந்தமாலை

சென்னை-28
1-8-66

 

பொருளடக்கம்

பதிப்புரை

முதற்பதிப்பின் முன்னுரை

1. பொது வரலாறு

2.மூன்று நாவல்கள்

3. கல்கியின் நாவல்கள்

4. பின்னுரை

துணை நூல்கள்

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

கி.வா.ஜகந்நாதன்
தமிழாக்கம் – மின்னூல் வெளியீடு

 

0 responses to “தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »