தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு

தமிழ்க்கோயில்கள்-தமிழர்-பண்பாடு

தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு

            விண் மறைக்கும் கோபுரங்கள், வினை மறைக்கும் கோயில்கள் நிறைந்தது நம் நாடு. தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு அளவிற்கு வேறு எந்த நாட்டிலுமே கோயில்கள் இல்லை. ஏன் ? அழகிலும் காம்பீர்யத் திலும் கூட தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு ஈடு இணை சொல்லக்கூடிய கோயில்கள் பிற நாடுகளில் இல்லை என்பதும் சரித்திரப் பிரசித்தம். இந்தக் கோயில்கள் எப்படி எழுந்தன? யார் உருவாக்கினார்கள்? யார் இலக்கணம் வகுத்தார்கள்? அவைகள் மக்களது சமுதாயத்திற்கு எவ்வளவு இன்றியமையாததாக இருந் திருக்கின்றனர் ? என்றெல்லாம் தமிழர்களாகிய நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?


            கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றி மூத்தவர்கள் தமிழ் மக்கள் என்பது வரலாறு. அந்தப் பழந் தமிழர் உண்ணத் தெரிந்து
இருக்கிறார்கள்; உடுக்கத் தெரிந்திருக்கிறார்கள்; உறங்கத் தெரிந்திருக்கிறார்கள். இத்துடன் மனித வாழ்வு முடிந்து விட இல்லை என்பதையுமே உணர்ந்திருக்கிறார்கள். வாழ்விலே இவர்கள் பெற்றிருந்த அமைதியை வானில் எழுந்த இடியும் மின்னலும், காற்றில் தோன்றிய கடுமையும், காட்டில் எழுந்த கடுந்தீயும், ஆற்றில் புரண்ட வெள்ளமும், நிலத்தில் தோன்றிய பூகம்பமும், குலைத்திருக்கிறது. இது காரணமாக வாழ்க்கை ஆட்டம் கொடுத்துவிடுமோ என்று அஞ்சியிருக்கிறார்கள்.

            இந்த அச்சத்திலே பிறந்திருக்கிறது இறை உணர்ச்சி. நிலம்,நீர், அனல், காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் பயங்கர நிலையைக் கண்டு அஞ்சியே இறைவனை நினைத்திருக்கிறார்கள் முதலில். அஞ்சி வழிபட்ட ஐம்பூதத்தின் சாந்த நிலையை உணர்ந்த பின் தான் அன்பு பிறந்திருக்கிறது அவர்கள் உள்ளத்தில். அதன் பின்னரே, உலகின் நன்மைக் கெல்லாம் காரணமாக இருக்கும் ஆதவன், அவன் ஒளியிலே பங்கு பெற்று அவன் வெம்மையைக் குறைத்து தண்மையையே அளிக்கும் சந்திரன், இரண்டிற்கும் அடுத்தபடியாக ஆக்கவும் அழிக்கவும் உதவும் அனல் இவற்றையே கொடிநிலை, வள்ளி, கந்தழி என்றெல்லாம் பெயரிட்டு வணங்கியிருக்கிறார்கள்.


”கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

என்பது தானே தொல்காப்பியர் கூற்று.

            இப்படி இறை உணர்ச்சி பெற்ற தமிழர் பின்னர் நீண்டுயர்ந்த மலையைக் கண்டு அதில் வளரும் மரம், செடி கொடிகளைக் கண்டு அந்தச் செடிகளில் மலரும் மலர்களைக் கண்டு, அந்த மலர்களில் எழும் மணத்தினை நுகர்ந்து இன்பம் பெற்றிருக்கிறார்கள். அப்படியே அகன்று பரந்த கடலிலே அந்தக் கடல் அலைகளின் ஒலியிலே அந்த ஒலி எழுப்பிய இன்னிசையிலே உள்ளம் பறிகொடுத்திருக்கிறார்கள். அஞ்சி வழிபட்ட உள்ளத்திலே அன்பு கலந்த இன்பம் பிறந்திருக்கிறது. இந்த இன்பத்தை உருவாக்க அழகுணர்ச்சி தோன்றியிருக்கிறது.

            அப்படித்தான் மலை மூலமாக இறை வழிபாடு ஆரம்பத்திருக்கிறது. அந்த மலையையும் அலையையும் கலையையும் உருவகப்படுத்தியே மலை மகள், அலைமகள், கலைமகள் என்று கற்பனை பண்ணி யிருக்கிறார்கள். இடையிடையே பழைய பயமும் விட்ட பாடில்லை. அந்தப் பயத்தை எல்லாம் எண்ணியபோது, கலைமகள், அலைமகள், மலைமகள் மூன்று பேரையும் சேர்ந்தே நினைத்திருக்கிறார்கள். அந்த மூன்று உருவ மும் சேர்ந்த அன்னையையே பராசக்தி – பழையோள் என்று வணங்கியிருக்கிறாள்.
இப்படித்தான் இறைவழிபாடு மலை முகட்டிலும் கடல் கரையிலும் நதி தீரங்களிலும் ஆரம்பித்திருக்கிறது. பின்னரே கல்லையும் மண்ணையும், மரத்தையும் மிருகத்தையுமே வணங்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள். இப்படி வணங்கத் தலைப்பட்டவர்களே, தாங்கள் வணங்கிய தெய்வங் களுக்கு உருவங்கள் அமைத்திருக்கிறார்கள்.

            அந்த உருவங்களைச் சுற்றி கோயில்கள் எழுப்பியிருக்கிறார்கள்; மாடங்கள் கட்டியிருக்கிறார்கள்; கோபுரங்களை உயர்த்தி இருக்கிறார்கள். இயற்கையில் பிறந்த இறைவழிபாடு, பின்னர் மனிதனது கலை உணர்வால் வளர்ந்து வளர்ந்து வளம் பெற்றிருக்கிறது. கோயில்களாக அவைகள் உருவாவதற்குப் பெரியவர்கள் வழிகளை வகுத் திருக்கிறார்கள்; மூர்த்திகளைப் உருவாக்கத் திட்டமிட் டிருக்கிறார்கள், கோயில் நிர்மாணத்தைப் பற்றி – மூர்த்திகரமாக விளங்கும் சிற்ப வடிவங்களைப் பற்றி சில்பரத்தினம் முதலிய சிற்ப நூல்கள் எழுவதற்கு முன்னமேயே ஆகமங்கள் எழுந்திருக்கின்றன. அந்த ஆகமங்களில் காணும் வழி முறைகளைப் பற்றியே ஒரு சில வார்த்தைகள் இன்று.

            ஆகமம் என்னும் வடமொழிப் பதத்தின் பொருள் தொன்று தொட்டு வரும் அறிவு என்பதேயாகும். அது பொதுவாக வே தங்களுக்கும் சாஸ்திரங்களுக்குமே அமைந்த பெயர் என்றாலும், சிறப்பாக இறை வழிபாடு, மந்திரம், மூர்த்தி, ஆலயம் முதலியவற்றை விளக்கிக் கூறுவதாக அமைந்திருக்கிறது. வழிபடும் கடவுளின் பெயராலேயே ஆகமங்கள் பேசப்படுகின்றன. னுடைய வழிபாட்டைக் கூறுவது சிவாகமம். விஷ்ணு வின் வழிபாட்டைக் கூறுவது வைஷ்ணவ ஆகமம். சக்தியின் வழிபாட்டைக் கூறுவது சாக்த ஆகமம்,

நாடு நகரமும் நற்றிருக் கோயிலும்

தேடித் திரிந்து, சிவபெருமான் என்று

பாடுமின்; பாடிப் பணிமின்; பணிந்தபின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே


            என்பது திருமூலரது வாக்கு. எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம் உள்ளத்துக்கு உள்ளேயும் இருக்கிறார் என்று உணர்வது சாதாரண மனிதர்களாகிய நமக் கெல்லாம் எளிதாக சித்தியாகிறது ஒன்றல்ல, “தேடிக் கண்டு கொண்டேன் தேவாதி தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்” என்று எக்களிப்போடு பாடுவது நாவுக்கரசர் போன்ற சமய குரவர்களுக்கே சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆதலால் இறைவனை ஒரு இடத்தில் இருப்பதாக உருவகப்படுத்தி, அந்த இடத்தில் ஆன்மா லயித்து நிற்கும்படி செய்வதே நம் போன்ற சாதாரண மக்களுக்கு சாத்தியமான தொன்று. ஆன்மாக்களை இறைவனிடம் லயிக்கச் செய்யும் இடம் என்பதனாலேயே ஆலயம் என்று அழைத்திருக்கிறார்கள். உள்ளத்துள்ளேயே இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த அந்தப் பூசலார் நாயனார் கூட, அந்த இறைவனுக்கு உள்ளத்துக்குள்ளேயே ஒரு ஆலயம் அமைக்க முனைந்திருக்கிறார் என்றால் கேட்பானேன்.

 
            இனி இந்த ஆலயங்கள் எப்படி அமைய வேண்டும், அந்த அமைப்பைப்பற்றி ஆகமங்கள் என்ன கூறுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம் தானே. ஆலயத்தின் பிரதான பாகம் மூலஸ்தானம். அங்குதான் இறைவனது திரு உருவம் அமைக்கப் படுகிறது. சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் லிங்கத் திரு உருவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். காரணம், உருவமும் இல்லாமல் அருவமும் ஆகாமல் அருவுருவத் திருமேனியனாக சிவபிரான் லிங்க உருவில் இருக்கிறான் என்று எண்ணியிருக்கிறார்கள்.

            சிவன் ஒருவனே பரமாத்மா. அவனுக்கு மாத்திரமே லிங்கம் உரியது என்று சைவ ஆகமங்கள் கூறும். மூலஸ் தானம் அல்லது கர்ப்பக்கிருகம் ஆலயத்தின் மற்றைய பகுதிகளைவிட மிகச் சிறியதாகவும் ஒரே ஒரு வாயிலை மட்டும் உடையதாகவும் இருத்தல் வேண்டும். கர்ப்பக் கிருகத்தை அடுத்து அமைக்கப்படுவது. அர்த்த மண்டபம். இதற்கு இரண்டு வாயில். கர்ப்பக் கிருகத்தை விடச் சற்று விசாலமானது. அங்கு நின்றே அருச்சகர் தீபம் ஏற்றி தீபாராதனை எல்லாம் செய்வார். பக்தர்கள் அர்த்த மண்டபத்திற்கு வெளியே உள்ள மகா மண்டபத்தில் நின்றே தரிசனம் செய்வர். அர்த்த மண்டபத்தில் சிவலிங்கத்துக்கு எதிர்முகமாக சிறிய நந்தி விக்கிரகம் அமைந்திருக்கும். மூலஸ்தானத்தின் வாயிலின் வலதுபுறம் விநாயகரும் இடதுபுறம் சுப்பிரமணியரும் இருப்பர்.


            ஆலயத்தை வலம் வருவதற்கு அமைக்கப்படும் இடம் பிரகாரம் எனப்படும். ஒவ்வொரு கோயிலுக்கும் மூன்று அல்லது ஐந்து பிரகாரங்கள் அமைக்கப்படும். கர்ப்பக் கிருகத்தைச் சுற்றியிருக்கும் பிரகாரத்தில் கோஷ்டங்கள் அமைத்து தென்பக்கத்துக் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியும், மேல்பக்கத்துக் கோஷ்டத்தில் லிங்கோத்பவரும் வட பக்கத்துக் கோஷ்டத்தில் துர்க்கையையும் அமைத்தல் வேண்டும். துர்க்கைக்கு எதிரே எதிர்முகமாக சண்டீசர் இருப்பார். வெளிப் பிரகாரத்தில் வாயிலுக்கு நேரே கொடிமரம், பலிபீடம், பெரிய நந்தி முதலியவைகளும் அமையும். கோயிலின் முதல் வாயிலிலேயே கோபுரமும், மூலஸ்தானத்தின் மீது விமானமும் கட்டப்பெறும். விமானத்தின் மீதும் கோபுரத்தின் மீதும் பொற்கலசங்கள் அமைக்கப்படும். கோவிலைச்சுற்றி கட்டப்பெறும் மதில் சுவர்மீது வெளியிலிருந்து காண்பவர் சிவாலயம் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு நந்தியையேனும் சிவகணங்களையேனும் அமைத்தல் வேண்டும்.

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவதற் காக புதிய ஆலயங்களை அமைக்குமாறும், பழைய ஆலயங்களைப் புதுப்பிக்குமாறும் ஆகமங்கள் கூறுகின்றன.

”ஆலயம் புதுக்குக, அந்தணாளர்தம்

சாலையும் சதுக்கமும் சமைக்க,

காலையும் மாலையுங் கடவுளர்க்கு அணி

மாலையும் தூபமும் வழங்குக”


            என்று தானே கவிச்சக்கரவர்த்தி கம்பனும் அந்த ஆகமங்களின் அடி ஒற்றிக் கூறுகிறான். ஆகமத்தில் கிரியா பாதம், சரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என நான்கு பிரிவுகள் உண்டு. இந் நான்கு பாதங்களையும் கூறும் சிவாகமங்கள் இருபத்தி எட்டாகும். அத்தனையையும் திருமூலர் திருமந்திரத்தில் ஐந்தாம் தந்திரத்தில் விளக்குகிறார். அந்த ஐந்தாம் தந்திரம் வாதுளாகமத்தின் சாரம் என்பர், இரண்டையும் கற்று அறிந்தவர்கள். ஆலய சேவையைப்பற்றியும், பஞ்ச பர்வ உத்சவம், பிரமோத்சவம் முதலிய உத்சவங்களைப் பற்றியும், மூர்த்திகளின் சிற்ப வடிவங்கள், வாகனங்கள், ரதங்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன. காமிகாகமம், வாதுளாகமம், சுப்பிரபேதஆகமம், புட்காராகமம் ஆகிய ஐந்தும் கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இவைகள் சிலவற்றிற்கு தமிழ் மொழி பெயர்ப்புகளும் உண்டு. ஆகமங்களில் கூறப்பட்டுள்ள கும்பாபிஷேகம் நித்திய பூசை முதலிய நற் கருமங்களை விளக்குவதற் காக தனியாக வேறு நூல்களும் இயற்றப் பெற்றிருக்கின்றன.

பொருளடக்கம்

தமிழ்க் கோயில்கள்

1. ஆகமங்களில்
 2. குடைவரை அமைப்பு
3. கோயில்கள்
4. மாளிகைகள்
5. சரித்திரச் சான்று


தமிழர்ப் பண்பாடு

1. சிற்பத்தில் – ஓவியத்தில்
2. இலக்கியத்தில் – -பி. ஸ்ரீ. ஆச்சார்யா
3. இசையில் – -கே.வாசுதேவ சாஸ்திரி
4. மடாலயங்களில் -எஸ். சிவகுமார்
5. தினசரி வாழ்வில் -அ. ரா. இந்திரா

 

தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

S. R. சுப்பிரமணிய பிள்ளை

பப்ளிஷர்ஸ் :: திருநெல்வேலி -1

 

0 responses to “தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »