சேரநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு
இச்சிறு உரைநடை எழுதுவதற் கெழுந்த காரணங்கள் இரண்டு. ஒவ்வொரு நாட்டவரும் தத்தம் முந்தையோர் நிலையை நன்கறிந்து அவர் கடைப்பிடித்த நன்முறைகளின் வழி நிற்றல் நலன் தரும் எனக் கருதிய தொன்று.மற்றொன்று, பண்டைப் பனுவல்களாகிய பெரு நிலம் அகழ்ந்து, அரும்பொருட் புதையல்களை எடுத்துக் துய்ப்பதற்குரிய ஆர்வத்தை எழுப்பவேண்டு மென்பது.
இவ்விரு நோக்கமும் ஒருங்கே பெறத் துணைபுரிவது புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் இலக்கி யங்களே. எதுகையும் மோனையும் மலிந்து உள்ளீடற்ற வெள்ளைப் பாடல்களைக் கற்றின்புறும் தற்கால மக்கள் சிலர்க்கு அவை அரிதுணர் திறத்தனவாய்த் தோன்ற லாம். அதிலும் மாணவர் அவற்றின் பயனைத் துய்க்கச் சிறிதும் வன்மையற்றவர் ஆகின்றனர். பருப்பொருள வாய கதைகளையோ வரலாறுகளையோ புறநானூற்றுப் பாடல்கள் மேற்கொண்டிருக்குமாயின் அவர் கருத்து அதில் செல்லுதல் கூடும்.
அஃதில்லாமையின் நுணுகி நோக்க ஆசை குன்றி அப்படியே விட்டு விடுகின்றனர்.
இஃதுணர்ந்து கதை நிகழ்ச்சி கொடுத்துப் பாடல் களை விரித்துரைக்கலா மெனக் கருதினேன். எல்லாப் பாடல்களையும் அவ்வாறு செய்வது இயலுவதன்மையின் சேரநாட்டிற் றோன்றிய தமிழ்ப் பெருமக்கள் வரலாறுகள் ஐந்து,புறநானூற்றினின்றும் எடுத்துக்கொள்ளப்பட்டன. இரண்டு, சிலப்பதிகாரத்தினின்றும் தழுவிக் கொள்ளப்பட்டது.
இவற்றுள் சில இடங்கள், ஆராய்ச்சியாளர் கூற்றுக்க ளோடு முரணுவனவாய்த் தோன்றலாம். அவர் கொள் கைகளும் முடிந்த முடிவின அன்மையானும், எனது நோக்கம் மேலே விளக்கப்பட்டமை யானும் குற்றப்படா எனக் கருதித் துணிக்தெழுதலாயினேன்.
தமிழறிவிற் றலைகின்று தமிழ் வளர்த்த பெரியார் எழுவர் வரலாறுகளோடு பத்திப்பெரு வெள்ளத்தே முங்கித் திளைத்துச் சுவை ததும்பப் பாடல்க வியற்றியும் தூண்டியும் நின்ற சேநாட்டு நாயன்மாரிருவர், ஆழ்வாரொருவர் என்பவர்களது வரலாறுகளும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன. இவை, காலத்தாற் பிற்பட்ட பெரியபுராணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றின் துணை கொண்டு எழுதப்பட்டமையின் இறுதியில் வைக்கப் பட்டன. இத்தகைய பெரியார்களைத் தன்னகத்தே தாங்கிப் படைப்புக் காலந்தொட்டே மேம்பட்டு விளங்கிய சேரநன்னாட்டின் தனிப்பெருமை அறிய வேண்டுவது ஒருதலை யாதனின் அதளை முதற்கண் வைத்தேன்.
இங்ஙனம் எழுதப்பட்ட இச்சிறு உரைநடை நடுத்தர மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படு மென்பது எனது கருத்து. அதனால் இன்னும் பல பெரியாரது வரலாறுகளும் தொடர வரைந்து வருகின்றேன். தமிழ்ப் பெரியார், ஆதரவு தருவரேல் அவையும் வெளிவருதல் எளிதாகும். ஆதயின் அவர் கண்ணோட்டம் பெறத் துவங்கிடக்கின்றேன்.
தமிழறிவிற் கடைப்பட்டவனாய என்னையும் இச்சிறு பணியில் ஈடுபடுத்திய இறையருளை நினைந்து நினைந்து நைந்துருகுகின்றேன். இவ்வுரைநடை எழுதப்பட்ட காலத்திலும், அச்சூர்தி ஏறின காலத்திலும் வேண்டிய வேண்டியாங்கு அறிந்துதவிய என் ஆசிரியர் உயர்திரு. பண்டித- தா. சாஸ்தாங்குட்டிப் பிள்ளை யவர்களுக்கு நான் எழுமையும் கடப்பாடுடையேன். இஃதச்சூர்தி ஏறிய காலத்துப் பெரும்பொறுப்பெடுத்து நன்முறையில் பதிப் பித்துத் தீந்த தென்னிந்திய அச்சுநிலையத் தலைவர் திரு 1. இராமநாத பிள்ளையவர்கட்கும் எனது நன்றி என்றும் உரியதாகும்.
திருவஞ்தியில்லூர், செ.சதாசிவம்.
5-10-1115.
உள்ளுறை
சேரநாடு
1. சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன்
2. சேரமான் பெருஞ்சேரலாதன்
3. சேரன் செங்குட்டுவன்
4. இளங்கோவடிகள்
5. சேரமான் தகடுரேறிந்த பெருஞ் சேரலிரும்பொறை
6. கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
7. சேரமான் கணைக்காலிரும்பொறை
8. சேரமான் பெருமாள் நாயனார்
9. விரல் மிண்ட நாயனார்
10. குலசேகராழ்வார்
அரும்பதவுரை
பிழை திருத்தம்
சேரநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு
ஆசிரியர் : வித்வான் C.சதாசிவம்
பதிப்பாசிரியர்
S.M. ஜகநாதம்
புத்தக வியாபாரம்
நாகர்கோவில்
1940
Leave a Reply