சங்ககாலத் தமிழ் மக்கள்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே அறி வினும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழ்மக்களின் வாழ்க்கையினை விளங்கத் தெரிவிப்பன தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் சிலப்பதி காரம் ஆகிய செந்தமிழ் நூல்களாம். இந்நூல்களை அடிப் படையாகக்கொண்டு இவை தோன்றிய காலமாகிய சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையினைச் சங்ககாலத் தமிழ் மக்கள்’ என்னும் இந்நூல் காட்டுகிறது. சங்ககாலத் தமிழ் மக்கள் pdf
இந்நூலில் சங்ககாலத் தமிழகத்தின் பரப்பும், அதன் வளங்களும், அங்கு வாழ்ந்த தமிழாது குடிவாழ்க்கையும், ஆடவர்பெண்டிர்களுடைய சிறப்பியல்புகளும், தமிழ் மக்களது கல்விப் பயிற்சியும், தொழில் வன்மையும் இன்ன இன்னவெனச் சுருக்கமாக எளிய இனிய நடையில் விளக்கப்பெற்றுள்ளன சங்ககாலத்தே வாழ்ந்த செந் தமிழ்ப் புலவர்களின் உள்ளத்துணர்ச்சியினைக் கல்லூரி மாணவர்கள் சுருக்கமாக உணர்ந்துகொள்ளுதற்கு இந்நூல் துணை செய்யுமென்று கருதுகிறேன்.
30-6-48 ஆசிரியன்
தோற்றுவாய்
தமிழ் வளர்ச்சியிற் பேரார்வமுடைய பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங்களை நிறுவிக் கல்விப் பணி புரிந்த காலம் ‘சங்க காலம்’ என வழங்கப்பெறும். அக்காலப் பகுதி இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மக்கள் தங்கள் தாய்மொழி வழியாக எல்லாக் கலைகளையும் வளர்க்க எண்ணி, அரசியல் ஆதர விற் புலவர் பேரவையைக் கூட்டி அறிவினைப் பரப்பும் முறை நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இத்தகைய புலமைத் தொண்டினை நம் தமிழ் முன்னோர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தார்கள். அவர்களாற் போற்றப்பெற்று வளர்ந்த முச்சங் கங்களின் வரலாறு, இறையனார் களவியலுரையிலும், சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையிலும் விளக்கப் பெறுகின்றது.
நுண்ணறிவுடைய புலவர் பலரும் தமக்குள் மாறுபாடில்லாமல் ஒருங்குகூடித் தமிழாராய்ந்தபுலவர் பேரவையே சங்கம் என வழங்கப் பெறுவதாகும். இதனை முன்னுள் ளோர் ‘கூடல்’ என்ற பெயரால் வழங்கினார்கள். மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான், பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கத்தினை ‘நல்லாசிரியர் புணர்கூட்டு என்ற தொடமாற் குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தப் பிள்ளையார், மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தினை ‘மதுரைத் தொகை‘ என ஒரு திருப்பாடலிற் குறிப்பிடு கின்றார். இத்தொடரில் வந்த தொகையென்பது சங்கம் என்ற பொருளைத் தரும் தமிழ்ச்சொல்லாகும்.
தமிழ்க் கல்விச் சங்கமாகிய பாண்டியன் அவையம், தொல்காப்பியம் அரங்கேறிய காலத்திற்கு (2,500 ஆண்டுகளுக்கு) முன் தொடங்கிக் கி. பி. இரண்டாம் நூற் றாண்டு முடிய, நெடுங்காலம் நிலைபெற்றுத் தமிழ்ப் பணி புரிந்து வந்தது. பாண்டியர்களால் நிறுவப்பெற்ற தமிழ்ச் சங்கத்தைப் போலவே தமிழ் நாட்டிலுள்ள பேரூர்தோறும் தமிழ் வளர்க்கும் புலவர் பேரவைகள் தமிழ் மக்களால் நிறுவப்பெற்றிருந்தன. சங்க காலத்தில் எத்துணையோ தமிழ் நூல்கள் புலவர் பெருமக்களால் இயற்றப்பட்டன.
அவற்றுட் பெரும்பாலன கடல்கோளாலும், தமிழர் கனின் விழிப்பின்மையினாலும் அழிந்து போயின. அவை போக, இப்போது எஞ்சியுள்ளன சிலவே. இடைச் சங் கத்தில் வாழ்ந்த ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப் பெற்ற இயற்றமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமும், கடைச் சங்கத்துச் சான்றோர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்பனவும், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியனவும் சங்ககாலத்தில் இயற்றப் பெற்றனவாக இப்பொழுதுள்ள தமிழ் நூல்களாம். இந்நூல்களை ஆராயுங்கால் சங்ககாலத் தமிழகத்தின் பரப்பும், அரசியலமைதியும், நாகரிக வாழ்வும் நன்கு புலனாம். அவை ஈண்டு உரைக்கப்படும்.
பொருளடக்கம்
தோற்றுவாய்
1. தமிழகம்
2. தமிழர் வாழ்வியல்
3. ஆடவர் நிலை
4. பெண்டிர் நிலை
5. தமிழர் கல்வி நிலை
6. தமிழர் தொழில் நிலை
7. புலவர்கண்ட வருங்காலத் தமிழகம்
சங்ககாலத் தமிழ் மக்கள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர்,
வித்துவான் திரு. க. வெள்ளைவாரணன்
நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி,
6,கொண்டி செட்டித் தெரு, சென்னை-1. 1950
முதல் பதிப்பு – 1945
இரண்டாம் பதிப்பு – மே – 1950
Leave a Reply